தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் சாதாரண இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவது, பங்கேற்பு ஓய்வு ஊதிய திட்டம் ரத்து, தேர்வு நிலை சிறப்பு நிலைக்கு தனியாக ஊதிய விகிதமும் தர ஊதியமும் நிர்ணயிப்பது, ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து, தொடக்க கல்வித் துறையில் தமிழ் வழி கல்வி முறை தொடர்வது, தமிழ், வரலாறு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த டிசம்பர் மாதம் டிட்டோஜாக் உயர்மட்ட குழுத் தலைவர்கள் முதல்வரின் சிறப்பு செயலாளர், தலைமைச் செயலாளர், நிதித் துறை செயலாளர், கல்வித்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், தொடக்க கல்வித்துறை இயக்குநர் ஆகியோரை சந்தித்து மனு கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. இருப்பினும் அரசு தரப்பில் ஆசிரியர் டிட்டோஜாக்கின் கோரிக்கைகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர்,நாகை, திருச்சி மாவட்டங்களில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் பள்ளி செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் மாநிலம் முழுவதும் சுமார் 1லட்சம் ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணி பாதிக்கப்பட்டது.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.