தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு பிஎட் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, தகுதியுள்ள ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க, உயர் கல்வி செயலாள ருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.


சிறப்பு பிஎட் பட்டதாரிகள் சங்க மாநில தலைவர் வடிவேல் முருகன்,  யில் தாக்கல் செய்த மனு:
மனநலம் பாதித்த, பார்வையற்ற, கேட்கும் திறனற்ற, போலியோ தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி கற்பிக்கும் தகுதி உடைய சிறப்பு பிஎட் பட்டதாரிகள் ஏராளமானோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர்.
மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு சிறப்பு பிஎட் படித்தவர்கள் மட்டுமே கல்வி கற்பிக்க முடியும். மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி வழங்குவது மாநில அரசின் கடமையாகும். அதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது துரதிஷ்டவசமானது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பாடம் கற்பிக்க சிறப்பு பாடம் படித்த ஆசிரியர்கள் இல்லை. பொது பிஎட் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. சிறப்பு பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை. பொது பிரிவு ஆசிரியர் பணியிடங்களில் சிறப்பு பிஎட் முடித்தவர்களை நியமிக்கலாம் என மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
அதை பின்பற்றி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குறைந்த பட்சம் 2 பணியிடத்தை உருவாக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
2010 கணக்கெடுப்பில் 93,289 மாற்றுத்திறனாளிகள் கல்வி நிலையம் சென்று வருகின்றனர். இவர்களுக்கு பாடம் கற்பிக்க போதிய எண்ணிக்கையில் சிறப்பு ஆசிரியர்கள் இல்லை. எனவே, தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் சிறப்பு பிஎட் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தை உருவாக்கி, அதில் எங்களை நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
மனுவை நீதிபதி ராமசுப்பிரமணி விசாரித்தார். மனுதாரர் சார்பில் தாளை முத்தரசு, குருநாதன் ஆகியோர் ஆஜராகினர். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுக்கு பதில் அளிக்க உயர் கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.