பள்ளிக் கல்வித் துறையில் தகவல் சார்ந்த மேலாண்மை முறைமை திட்டத்தில் ஆசிரியர்களின் வருகையையும் குறுஞ்செய்தி மூலம் கண்காணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் டி.சபீதா தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறையில் தகவல் சார்ந்த மேலாண்மை முறைமை திட்டத்தில் ஆசிரியர்களின் வருகையையும் குறுஞ்செய்தி மூலம் கண்காணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் டி.சபீதா தெரிவித்துள்ளார். . தொடக்கக் கல்வித் துறையின் சார்பில் கோவை மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம், கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரியில் டி.சபீதா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பள்ளிக் கல்வி மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி பேசியது: மாணவர்களுக்கு அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்கள் உடனுக்குடன் அந்தந்தப் பள்ளிகளுக்கு சென்றடைய, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், உதவி கல்வி அலுவலர் ஆகியோர் விரைந்து பணியாற்ற வேண்டும் என்றார். பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் டி.சபீதா பேசியது: பள்ளிக் கல்வித் துறையில் தகவல் சார்ந்த மேலாண்மை முறைமை என்ற திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்படி ஒவ்வொரு ஒன்றியத்தில் உள்ள அலுவலர்கள், பள்ளிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரின் விவரங்களும் பதிவு செய்யப்படும். மேலும், மாணவர்களுக்குத் தேவையான கூடுதல் விவரங்களும் இதில் உள்ளது.இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஆசிரியர்களின் வருகையையும் குறுஞ்செய்தி மூலம் கண்காணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.மாணவர்களின் சேர்க்கை கணக்கெடுப்புகளை தயார் செய்து விரைவாக வழங்க வேண்டும். இப் புள்ளிவிவரங்கள் அடுத்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி கொண்டு வர பயன்படுத்தப்படும். ஆங்கிலவழிக் கல்வி கொண்டு வரும் போது மற்ற தனியார் பள்ளிகளிலிருந்து அதிக அளவிலான மாணவர்கள் அரசுப் பள்ளிக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், பள்ளிக்கு வராத குழந்தைகளையும் கணக்கெடுத்து அவர்களையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்