வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்குவது தொடர்பான ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.   தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித் துறை, நம்மால் முடியும் கரூர் அமைப்புகள் சார்பில் வன்முறையில்லாத சமுதாயத்தை உருவாக்க பள்ளி பொறுப்பாசிரியர்களுக்கான பயிற்சி முகாமை நடத்தி வருகிறது.  
இதன்படி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம், மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், 25 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, பள்ளிகளுக்கு ஒரு பொறுப்பாசிரியர் வீதம் பயிற்சியளிக்கப்பட்டது.   
நம்மால் முடியும் மாவட்ட பிரசார ஒருங்கிணைப்பாளர் டி.என். சேதுலிங்கன், பயிற்சி அமைப்பாளர் கே. தனலட்சுமி ஆகியோர் பங்கேற்று, பெண்கள் - பெண் குழந்தைகள் மீதான கண்ணோட்டம், பெண்கள் மீதான வன்முறை, குடும்ப வன்முறையும் குழந்தைகள் மனநிலை - உடல் நிலை, பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டறியும் விதம் மற்றும் ஆற்றுப்படுத்துதல், பள்ளிப் படிப்பை மேம்படுத்தும் நலம் சார்ந்த வாழ்க்கை முறைகள், பயிற்சி முகாமில் பங்கேற்ற பொறுப்பாசிரியர்களின் பங்கு குறித்து விளக்கினர்.